எத்தியோப்பியாவின் போரினால் பாதிக்கப்பட்ட டைக்ரே பிராந்தியத்தில் இரண்டு முகாம்கள் அழிக்கப்பட்ட பின்னர் 20,000 அகதிகளை காணவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் நவம்பர் மாதம் டைக்ரேயில் வெடித்த சண்டையில் அழிக்கப்பட்ட ஹிட்சாட்ஸ் மற்றும் ஷிமெல்பா முகாம்களில் இருந்து அகதிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி கருத்துப்படி, ‘ஐ.நா. அணுகக்கூடிய மை-ஐனியில் உள்ள மற்றொரு முகாமுக்கு சுமார் 3,000 பேர் வந்தனர்.
பல அகதிகள் கடத்தப்பட்டு, எரித்திரியா படைகளால் எரித்திரியாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்’ என் கூறினார்.
கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் ‘டைக்ரேயன்ஸ்’ எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் டைக்ரே மாகாணத்தை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசாங்கத்துக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.
டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயற்பட்டு வருகின்றன.
இந்த மோதலின் உச்சமாக கடந்த நவம்பர் மாதம், டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர்.
இதனால் டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. தற்போது பிராந்தியம் முழுமையாக அரசாங்க துருப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
கூட்டாட்சி துருப்புக்கள் நவம்பர் 28ஆம் திகதி, டைக்ரேயின் தலைநகர் மெக்கெல்லைக் கைப்பற்றியது, இப்போது இப்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களைக் கட்டுப்படுத்துகிறது. அரசாங்கம் வெற்றியை அறிவித்த போதிலும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எஃப்) தலைவர்கள் மோதலை தொடருவதாக கூறியுள்ளனர்.
இப்போது வடக்கு பிராந்தியமான டைக்ரேயில், உணவு, நீர் மற்றும் மருந்து பற்றாக்குறை நிலவுகின்றது.