கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகளின் பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
அத்துடன், குறித்த நாடுகளுக்குச் சென்றுவந்து 14 நாட்கள் முடிவடையாத பிற நாட்டவர்களும் சவுதி அரேபியாவுக்குள் நுழையத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சவுதி அரேபியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அந்நாட்டு நேரப்படி இன்று இரவு ஒன்பது மணிக்கு நடைமுறைக்கு வருமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தூதரக அதிகாரிகள், தடை விதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள சவூதி அரேபியக் குடிமக்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி. ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, லெபனான், துருக்கி, ஜேர்மனி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, போரத்துக்கல், சுவிற்சர்லாந்து, சுவீடன், பிரேஸில், ஆர்ஜென்டீனா, தென்னாபிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.