மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில், அந்த நாட்டு ஆசிரியர்களும் இணைந்துள்ளனர்.
யாங்கூன் நகரிலுள்ள டாகோன் பல்கலைக்கழகத்தில் சுமார் 200 ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி, இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஒத்துழையாமை இயக்கத்தின் அடையாளமான சிவப்பு பட்டி சின்னத்தைக் காட்டி மூவிரல் வணக்கம் செலுத்தினர். புரட்சியை வெளிப்படுத்தும் பாடலையும் பாடினர்.
இதே போன்ற போராட்டம், யாங்கூன் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. தலைநகர் நேபிடாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச ஊழியர்கள், சிவப்பு பட்டி சின்னத்தையும் புரட்சியின் அடையாளமான மூவிரல் வணக்கத்தையும் வெளிப்படுத்தி இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர் வின் டியினை பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அவர், கைது செய்யப்பட்டுள்ள அரச ஆலோசகரும் கட்சித் தலைவருமான ஆங் சான் சூகியின் நீண்ட கால உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த திங்கட்;கிழமை அதிரடியாக கவிழ்த்தது. அரசாங்கத்தின் ஆலோசகர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நாட்டில் ஓராண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இராணுவ தலைமை தளபதி மின் ஆங் லயிங்க் தலைமையில் 11 இராணுவ அதிகாரிகள் அடங்கிய ஆட்சி மன்றக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.