சீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங் லீ சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் சீன அரசாங்கம் முறையாகக் கைதுசெய்துள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட்டில் செங் லீ, ஒரு வகையான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதுடன் இந்தக் காவல், வழக்கறிஞர்களை அணுகுவதற்கான வாய்ப்பை மறுத்து ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைத்து விசாரிக்க சீனக் காவல்துறையை அனுமதிக்கிறது.
இதேவேளை, செங் லீயை முறையாகக் கைதுசெய்வது குறித்து கடந்த வார இறுதியில் சீன அதிகாரிகள் அறிவித்தல் வழங்கியதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செங் லீயின் செயற்பாடுகள் குறித்து அதிகாரபூர்வ விசாரணை தொடங்கவுள்ளது.