கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து பரவவில்லை என உலக சுகாதார அமைப்பின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 14 பேர் கொண்ட குழுவினர் ஜனவரியில் சீனா சென்று கடந்த ஒரு மாதகாலமாக ஆய்வு நடத்தினர்.
கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதற்கான தடயவியல் ஆய்வுகளை இக்குழுவினர் மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இக்குழுவினர், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனாவின் மூலக்கூறுகள் உகானிலோ சீனாவின் வேறு எந்தப் பகுதியிலோ இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர்.
உகானில் அந்த கொடிய வைரஸ் பரவுவதற்கு முன்பே அது வேறு மாகாணங்களில் பரவியிருக்கலாம் என்றும் சீனாவின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சீனாவின் அறிவிப்புகளுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்திக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.