மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், அத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியை இராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியது.
ஆளும் கட்சியின் முக்கிய தலைவா்களான ஆங் சான் சூகி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், இராணுவ ஆட்சியை எதிர்த்தும் ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தங்களுக்கு இராணுவ ஆட்சி வேண்டாம், ஜனநாயக ஆட்சிதான் வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக இருசக்கர வாகனங்களின் பேரணியும் சில இடங்களில் நடைபெற்றது.
போராட்டங்கள் தொடா்பான செய்திகள் மியன்மாரின் அரசுத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டன.
போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக பல இடங்களில் கண்ணீா்ப்புகைக் குண்டுகளை பொலிஸார் வீசினா்.
எனினும் போராட்டம் நடைபெறும் இடங்களிலிருந்து மக்கள் கலைந்து செல்லாமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.