மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் (National League for Democracy) கட்சியின், யாங்கோனில் உள்ள தலைமையகத்தில் அந்நாட்டு இராணுவம் சோதனை நடத்தியுள்ளது.
இந்த சோதனை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடத்தப்பட்டுள்ளதுடன், கட்சி அலுவலகமும் சேதமாக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
மியன்மாரில், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலுடன், போராட்டக்காரர்களுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்து சில மணி நேரங்களின் பின்னர் இந்தச் சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் மற்றொருவரும் காயத்துக்கு உள்ளாகியுள்ளார்.
நெய் பை தவ் நகரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்தத் தாக்குததல் இடம்பெற்றதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை்க கலைக்க, பொலிஸார் கண்ணீர்புகை மற்றம் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம், மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்ற நிலையில், மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இராணுவ ஆட்சியை்க கண்டித்துள்ள உலக நாடுகள் மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டுவர வலியுறுத்தி வருகின்றன.
இதேவேளை, நான்காவது நாளாகத் தொடர்ந்த இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம், இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.