கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமானது என பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் தடுப்பூசியில் இருப்பதற்கு ஒப்பான, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டிருக்கும் என்பதால், அவர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவது போதுமானதாக இருக்கும் என்று சுகாதார ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு முறை போடப்படும் தடுப்பூசி, முன்னதாக நோய்வாய்ப்பட்டவரின் உடலில், கொரோனா வைரஸை எப்படி எதிர்ப்பது என்ற தகவலை நினைவூட்டும் வகையில் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் பிரான்ஸின் தடுப்பூசித் திட்டம் துரிதமாகும் என்றும் நம்பப்படுகிறது.
தற்போது Pfizer, Moderna, AstraZeneca தடுப்பூசிகளை தமது நாட்டின் பிரஜைகளுக்கு இரு முறை வழங்கி வருகிறது பிரான்ஸ் அரசாங்கம்.
அங்கு இதுவரை 2.1 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு முதல் முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன், அவர்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் முறையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.