அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
இதன்படி, ஆறு முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி பயனுள்ளதா என்பதுகுறித்து இந்த ஆய்வில் கண்டறியப்படும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தப் பரிசோதனையில், சுமார் 300 தன்னார்வலர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு இம்மாதத்தில் முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிறுவர் நோய்த்தொற்று மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆராய்ச்சி தொடர்பான பேராசிரியரும், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிப் பரிசோதனையின் தலைமை ஆய்வாளருமான ஆன்ட்ரூ பொல்லார்ட் கூறுகையில், “பெரும்பாலான சிறுவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும். இந்நிலையில், குறிப்பிட்டளவு சிறுவர்கள் ஆராயபப்டும் தடுப்பூசி மூலம் பயனடையக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ‘உலகத்திற்கான தடுப்பூசி’ எனப் பாராட்டப்படுகிறது, அதாவது, போட்டி நிறுவனங்களை விட மலிவானது மற்றும் விநியோகிக்க எளிதானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இவ்வாண்டு மூன்று பில்லியன் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரும் ஏப்ரல் மாதத்திற்குள், மாதமொன்றுக்கு 200 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசியகை உற்பத்தி செய்வதை எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.