ஜப்பானின் சென்டாய் கடற்கரைக்கு அருகே 7.1 ரிக்டர் அளவில் நேற்று (சனிக்கிழமை) வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புக்குஷிமா அணுவுலைக்கு அருகே இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் காரணமாக 10 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்றும் வடகிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
60 கிலோமீட்டர் ஆழத்தில் ஜப்பான் நேரப்படி இரவு 11 மணியளவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இருப்பினும் தலைநகர் டோக்கியோவில் அதிர்வுகள் உணரப்பட்டன என்றும் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தற்போது விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.