ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரிஷ்யம் 2 திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் படத்தின் வெற்றி அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 75 கோடி ரூபாய் வரையில் வசூலித்து சாதனை செய்தது.
தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால் மீனா நடிக்க தயாராகி உள்ளது. இந்தப் படம் வருகிற 19-ந் திகதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
அதே நாளில் கேரளா முழுவதும் திரையரங்கிலும் திரிஷ்யம் 2 படத்தை வெளியிட முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில் ஓ.டி.டியில் வரும் திரிஷ்யம் 2 படத்தை திரையரங்கில் திரையிடமாட்டோம் என கேரள திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் விஜயகுமார் கூறும்போது “ஓ.டி.டியில் வெளியாகும் எந்த படத்தையும் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க முடியாது. இந்த விதிமுறை மோகன்லாலின் திரிஷ்யம் உள்பட அனைத்து நடிகர்கள் படங்களுக்கும் பொருந்தும்” எனத் தெரிவித்துள்ளார்.