மலேசியாவுடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதையடுத்து, வடகொரிய அதிகாரிகள் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புகர் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய தூதரகத்தில் அந்நாட்டின் தேசியக்கொடி மற்றும் குறியீடுகளை வடகொரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
பின்னர் அந்த அதிகாரிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் இரண்டு பேருந்துகளில் ஷாங்காய் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக விமானநிலையம் புறப்பட்டுச் சென்றனர்.
விமான நிலையத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக கோலாலம்பூர் தூதரக அலுவலகத்துக்கு வெளியே வடகொரிய வழக்கறிஞ்சர் கிம் யு சாங் கூறுகையில்,
‘மலேசிய அரசாங்கம் மன்னிக்க முடியாத கடும் குற்றத்தைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து, வடகொரியாவுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளுக்கு மலேசியாவும் துணைபோயுள்ளது.
எங்கள் நாட்டு குடிமகனை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதன் மூலம் ஒருமைப்பாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்த இரு நாட்டு உறவின் அடித்தளத்தை மலேசியா சீரழித்துவிட்டது’ என கூறினார்.