அவுஸ்ரேலியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்தப் பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல இடங்களில் அதிக அளவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனால் குறித்த மாநிலத்தில் 16 பகுதிகள், பேரிடர் வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, அங்கு நாளை மறுதினம் வரை கடும் மழைபெய்யும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 18 ஆயிரம் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அதேநேரம் வெள்ள எச்சரிக்கை காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் 8 மில்லியன் மக்களை வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்தே பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.
குறிப்பாக சிட்னி நகர மக்களுக்கு, குடிநீர் வழங்கும் வாரகம்பா அணையில், நீர் மட்டம் முழு கொள்ளளவை தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த, 1990ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்த அணையில் இருந்து நீர் நிரம்பி வழியவுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், அணையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு இடம்பெயர்த்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வடக்கு சிட்னியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை நோக்கி, மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இதேநேரம், மீட்புப் பணிகளில் நூற்றுக்கணகான படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.