புதிய கொரோனா வைரஸ் சட்டங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கும் சட்டம், அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது.
இன்று (திங்கட்கிழமை) வீட்டில் தங்கும் விதி முடிவடைகின்ற போதிலும், வெளிநாட்டு விடுமுறைகள் தற்போது அனுமதிக்கப்படவில்லை.
கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தற்போதைய திட்டத்தின் கீழ், பிரித்தானியாவில் மக்கள் விடுமுறைக்கு வெளிநாடு செல்லக்கூடிய ஆரம்ப திகதி மே 17 ஆகும்.
இருப்பினும், ஐரோப்பாவில் கொவிட் நிகழ்வுகளின் மற்றொரு எழுச்சி, ஐரோப்பா முழுவதும் தடுப்பூசிகளின் மெதுவான வெளியீடு ஆகியவை வெளிநாட்டு பயணங்களை மீண்டும் தொடங்குவதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் கூறுகையில், ‘அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் மற்றும் புதிய வகை வைரஸ் பரவுவதை பாதுகாக்க வெளிநாடுகளுக்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள் அவசியம். அவை தடுப்பூசி போடும் பணியினையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்’ என கூறினார்.