கடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 320யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) தெற்கு மியான்மரில் உள்ள மெய்க் நகரில் மேலும் மூன்று பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மியன்மார் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இந்த சமீபத்திய எண்ணிக்கை வந்துள்ளது.
அத்துடன் மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர், இராணுவத்தால் இதுவரை கிட்டத்தட்ட 3,000 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டனர் அல்லது தண்டிக்கப்பட்டுள்ளனர்.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது.
அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.