தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளதாகவும் 200இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் இன்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப் பதிவுக்காக ஏழை, தினக்கூலி மக்கள் அதிகமாக வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள வைகோ, அவர்கள் தன்னை வரவேற்றதாகவும் தி.மு.க.வுக்கு மக்களிடம் பேராதரவு திரண்டிருப்பதைக் காணமுடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் ஜனநாயகத்தின் தீர்ப்பு ஸ்டாலின் முதல்வர் என்பதாகவே அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் தேர்தலை இரத்துச் செய்யக் கோரிய அ.தி.மு.க.வினரின் மனு குப்பைத் தொட்டிக்குன் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள வைகோ, இந்த்த தேர்தலில் அ.தி.மு.க.வினர் படுதோல்வி அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.