கொரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதால், இனி பொது இடங்களில் முககவசம் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாக்க முககவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முககவசம் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் ஞாயிறு முதல் இஸ்ரேலில் பொது இடங்களில் மக்கள் முக கவசங்கள் அணிந்து கொள்ளத் தேவையில்லை.
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் பலனளிக்கிறது’ என கூறினார்.
கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 29ஆவது நாடாக விளங்கும் இஸ்ரேலில் இதுவரை எட்டு இலட்சத்து 36ஆயிரத்து 740பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆறாயிரத்து 315பேர் உயிரிழந்துள்ளனர்.