சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ள நிலையில், அவரது உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து 24 நாட்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ள அலெக்ஸி நவால்னி வெளியிட்டுள்ள செய்தியில்,
‘சிறையில் எனக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது இனியும் உண்ணா விரதம் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்ததால் அதனைக் கைவிடுகிறேன்’ என கூறியுள்ளார்.
ஜனாதிபதி விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு கடந்த ஆண்டில் நோவிசோக் என்று இரசாயன நஞ்சு அளிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்றார்.
இதன்பிறகு கடுமையான சிகிச்சைக்கு பிறகு மீண்ட நவால்னி, கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கு திரும்பிய போது பழைய பணமோசடிக் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்போது சிறையில் தனது மருத்துவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறி கடந்த மாரச் 31ஆம் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.
இதனால், அவரது சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய இரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரித்ததையடுத்து அவர் புடின் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.