யாழ்ப்பாணம், தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி வெறிச்சோடிக் காணப்படுவதுடன் இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய பகுதிகளே நேற்றிரவு முதல் மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 37 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா மூவருக்கும் என வடக்கில் 43 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதில், யாழ். கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 21 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.