கொரோனா தொற்றை எதிர்கொள்வதால் பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் மறந்துவிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புத்த பூர்ணிமா தினத்தை ஒட்சி காணொலியூடாக உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ கொரோனா தொற்று அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. எனினும் இந்த தொற்று நமக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியுள்ளது. நம் போராட்டத்திற்கான வழிகளை பலப்படுத்தியுள்ளது.
கொரோனாவால் தங்களின் உறவினர்களை இழந்தவர்களுக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா தொற்றுபோல் ஒரு நெருக்கடியை நம்மில் யாரும் இதுவரை பார்த்ததில்லை.
கொரோனா தொற்றுக்கு பின் நம் உலகம் முன்புபோல் இருக்காது. வருங்காலங்களில் நம் திட்டங்கள், நிகழ்ச்சிகளை கொரோனவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என வகுத்துக்கொள்ள வேண்டும்.
கொரோனாவுக்கு எதிராக நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்போது, மனிதர்கள் சந்திக்கும், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் மீதான பார்வையை நாம் இழந்துவிட கூடாது. மறந்துவிட கூடாது.
மனித நேயத்தை நம்புபவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்று சேர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.