பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிரியாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாக பஷார் அல் அசாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு போரால் தடுமாறும் சிரியாவில், அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
பதிவான 78.6 சதவீத வாக்குகளில் அசாத் 95.1 சதவீத வாக்குகளை பெற்று அபார வெற்றியினை பதிவுசெய்தார். இதனை நாடாளுமன்ற சபாநாயகர் உறுதிசெய்தார்.
அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலோம் அப்துல்லா 1.5 சதவீத வாக்குகளையும் மகமோத் அகமத் மாரி 3.3 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
இந்த வெற்றியை அசாத் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் கொண்டாடினர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முன்னிலை நிலவரம் அசாத்துக்கு சாதகமாக இருந்ததால், தெற்கு பகுதியில் உள்ள அலெப்போ, ஸ்வேதியா ஆகிய பல்வேறு நகரங்களில் ஒன்றுகூடி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
எனினும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இது நியாயமாக நடத்தப்பட்ட தேர்தல் இல்லை என்று தெரிவித்துள்ளன. ஆனால் வாக்களிக்க வந்த சிரியாவின் ஜனாதிபதி அசாத், மேற்கத்திய நாடுகளின் கூற்றை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.