ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக, டென்மார்க் இராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது.
இணைய வசதிக்காக கடலுக்கு அடியில் பதித்து வைக்கப்பட்டுள்ள கேபிள் வழியாக கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை, உளவு அமைப்புடன் இணைந்து சுவீடன், நோர்வே, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகளை உளவு பார்த்துள்ளது.
ஜேர்மனியின் அதிபர் தவிர, அந்நாட்டில் அப்போது வெளியுறவு துறை அமைச்சராக இருந்த பிராங்க்-வால்டர் ஸ்டீன்மெயர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பீர் ஸ்டீன்பிரக் ஆகியோரையும் உளவு பார்த்துள்ளது.
டென்மார்க் இணைய தள கேபிள்களில் இருந்து குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, உரையாடல்கள் மற்றும் பிற செய்தி பகிர்வு சேவைகள் என எல்லாவற்றையும் இடைமறித்து விரிவான தரவுகளை அமெரிக்கா பெற்றுள்ளதாக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில், டென்மார்க் இராணுவ உளவு பிரிவு மேற்கொண்ட புலனாய்வில் தெரியவந்துள்ளது.