மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள், நாளை (புதன்கிழமை) முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை அச்சுறுத்திய செயற்பாட்டினை கண்டித்தே, இந்த பணிப்பகிஸ்கரிப்பு நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டு.ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அண்மையில் தொலைபேசி உரையாடல் ஒன்றின் ஊடாக, தமது பணிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த தொலைபேசி உரையாடல் ஊடாக அச்சுறுத்திய சந்தேகநபரை கைது செய்யும் வரை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று நடவடிக்கையில் இருந்து மாத்திரம் தமது பணியை பகிஸ்கரிப்பு செய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.