தென்கொரியாவுக்கு அதிக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்து வடகொரியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் இடையே கடந்த மே 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது, ஏவுகணை தயாரிப்புக்கு தென் கொரியாவுக்கு நீண்ட காலம் விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியது.
மேலும், எவ்வளவு தூரம் செல்லக்கூடிய ஏவுகணையாக இருந்தாலும் அதைத் தயாரிக்க அனுமதி அளித்தது.
இந்தநிலையில் அமெரிக்காவின் இந்த முடிவானது கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து வட கொரியாவின் சர்வதேச விவகார விமர்சகர் கிம் மோக் சோல் கூறியதாக கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
‘வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டம் இதுவாகும். அமெரிக்கா செய்த இந்தத் தவறு, வடகொரியாவுக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி, கொரிய பகுதிகளில் போர்ச் சூழலையும் உண்டாக்கும். ஆயுதப் போட்டியை உண்டாக்க அமெரிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடகொரியாவின் இந்தக் கருத்தை தனி நபரின் கருத்தாக பார்ப்பதாகவும், அரசாங்கத்தின் கருத்தாக கருதவில்லை என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
800 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்க தென் கொரியாவுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்த வகை ஏவுகணைகள் வடகொரியா முழுவதும் தாக்கக் கூடியதாகும். ஆனால், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தாக்கக்கூடிய வல்லமை கிடையாது.