ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 44 சதவீதம் வரையிலான அமெரிக்க துருப்புக்கள் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் அனைவரையும் திரும்பப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மத்திய இராணுவ தலைமையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி, ஆப்கானிஸ்தானிலிருந்து 30 முதல் 44 சதவீதம் வரையிலான அமெரிக்க வீரர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இதுவரை 6 இராணுவ நிலைகள் ஆப்கன் இராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டில் நியூயோர்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனுக்கு, அப்போதைய தலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அரசாங்கம் புகலிடம் அளித்தது.
இதையடுத்து 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தலிபான்களின் ஆட்சியை அகற்றியது.
இதன்பிறகு இருதரப்பிலும் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில், தாக்குதல்களைக் குறைத்துக் கொள்ளவும் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளவும் தலிபான்கள் சம்மதித்தனர்.
ஆப்கான் அரசாங்கத்துடன் நல்லிணக்கப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் சம்மதித்தனர்.
அதற்குப் பதிலாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக விலக்கிக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது.