ஹொங்கொங்கின் முக்கிய ஜனநாயக சார்பு ஆர்வலர் ஆக்னஸ் சோ, தனது தண்டனை காலம் முழுவதும் முடிவடைவதற்கு முன்னரே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
10 மாத கால சிறை தண்டனையில் அவர், ஏழு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு சிறையில் இருந்து வெளியேறினார்.
அவரை ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்கள் வரவேற்றன. ஆனால் அவர் ஊடகங்களுக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் வெளியேறினார்.
ஆதரவாளர்கள் ‘ஆக்னஸ் சோ ஆட் ஆயில்’ என்று கூச்சலிட்டனர். இது கான்டோனிய மொழி, ஊக்கத்தின் வெளிப்பாடாகும். இது நகரத்தை உலுக்கிய போராட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
சோவின் ஆதரவாளர்கள், அவரது குடும்பத்தையும் நாட்டையும் காப்பாற்ற போராடிய புகழ்பெற்ற சீன கதாநாயகியைக் குறிக்கும் வகையில், அவரை ‘உண்மையான முலான்’ என்று பெயரிட்டுள்ளனர். மற்றவர்கள் அவளை ‘ஜனநாயகத்தின் தெய்வம்’ என்று அழைத்தனர்.
சோவ் தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்னரே விடுவிக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு அதிகாரிகளும் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
2019ஆம் ஆண்டில் ஹொங்கொங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது முக்கிய பங்கு வகித்த 24 வயதான சோவ், சீன ஆளுகை நகரத்தில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே சட்டவிரோத பேரணியில் ஈடுபட்டதற்காக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அத்துடன் சக ஆர்வலர்கள் ஜோசுவா வோங் மற்றும் இவான் லாம் ஆகியோர் 2019ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களில் பங்கு வகித்ததற்காக கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மற்றொரு முக்கிய இளம் ஆர்வலரான நாதன் லா, ஹொங்கொங்கிலிருந்து தப்பிச் சென்று பின்னர் பிரித்தானியாவில் குடியேறியுள்ளர்.