அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியமையினால் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளி ஊடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் 2 வார காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியமையாலும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்தமையினாலும் வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளது.
இதேவேளை சில கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இக்கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்.
மேலும் கட்டுப்பாட்டை மீறுபவர்கள, தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்.
அத்துடன் மக்கள் அனைவரும் முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.