தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தொடர்ந்து செயல்பட முடியும். ஏனைய தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
பாடசாலை மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நிர்வாக பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் காலை 7 மணி முதல் 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சாலையோர உணவு கடைகளில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.