ஆஃப்காஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்ற நிலையில், தலிபான்களுக்கு எதிராக போராட அங்குள்ள பெண்கள் ஆயுதமேந்த தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலான பெண்கள் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளையும் ஆப்கானிஸ்தானின் கொடியையும் சுமந்து நிற்கும் படங்கள் கடந்த சில நாட்களாக வெளியாகின.
தலிபான்களுடன் அரசாங்கத்தால் தனியாகப் போராட முடியாது என்ற காரணத்தால், ஜாஸ்ஜான் மற்றும் கௌர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.
தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களின் இந்த முன்னெடுப்பு, காபூல், ஃபார்யாப், ஹெராத் மற்றும் பிற நகரங்களிலும் கூட தொடங்கியுள்ளது.
தலிபான்களுக்கு எதிராக ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என்றும் இது மிகவும் நல்லதோர் நேர்மறையான முன்னெடுப்பு என்றும் பெண்கள் கூறுகின்றனர்.
தலிபான்களின் அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு எதிராகவும் தங்கள் சுதந்தரம் வேண்டியும் அனைவரும் முன் நிற்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையே பெண்களுக்கான தலிபானின் கொள்கை குறித்து கட்டாரில் உள்ள தலிபானின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீனிடம் கேட்டபோது,
‘பெண்களுக்குக் கல்வி மற்றும் வேலை செய்யும் முழு சுதந்திரமும் இருக்கும், ஆனால் அவர்கள் இஸ்லாமிய முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் ஹிஜாப் அணிய வேண்டும். தலிபபன்களிடமிருந்து எந்தத் தடைகளும் இருக்காது. அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய மரபுகள் மற்றும் பாணியின்படி தொடர்ந்து செயற்பட முடியும்’ என கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், ஆஃப்கான் பெண்கள் ஆயுதம் ஏந்துவது இதுவே முதல் முறை. இது ஒரு குறியீட்டுச் செய்தி என்று உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.