ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெய்டி பொலிஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஹெய்டியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். மருத்துவரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹெய்டி வந்துள்ளார்.
ஜனாதிபதி ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது மாறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், இது பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என கூறினார்.
இதனிடையே, ஹெய்டியின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்று முன்தினம் ஹெய்டி சென்றனர்.
இவர்கள் ஹெய்டியின் ஆட்சித் தலைவர் என தங்களை கூறி வரும் 3 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக ஜனாதிபதியின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹெய்டி அரசாங்கம் கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள தீவு நாடான ஹெய்டியின் ஜனாதிபதி 53 வயதான ஜோவனல் மோஸ், தனது பதவிக்காலம் முடிந்த போதும், ஓராண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார்.
இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள அவர் தனது வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல், ஜனாதிபதி ஜோவனல் மோஸ் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது.
இதில் ஜனாதிபதி ஜோவனல் மாய்சே உயிரிழந்தார். அவரது மனைவி மார்ட்டின் மோஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், 28பேருக்கு தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 26பேர் கொலம்பியாவையும், 2பேர் ஹெய்டி தீவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள்.
அத்துடன், இந்த 28பேரில் 15கொலம்பியர்கள், 2அமெரிக்கர்கள் என மொத்தம் 17பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 3 கொலம்பியர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். எஞ்சிய 8பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது