கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்றமை ஒரு வரப்பிரசாதம் என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், இதனை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான டபிள் புரொமோஷன் எனவும் தெரிவித்துள்ளார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் இன்று(வியாழக்கழமை) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி அமைப்பின் நிதிப் பங்களிப்பில் ‘இயக்கி’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள உணவு விற்பனை நிலையத்தின் திறப்பு விழா, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், “அண்மைக் காலமாக நட்சத்திர அந்தஸ்துள்ள உணவகங்களைவிட கிராமிய வாசனை வீசுகின்ற உணவகங்களை நாடி மக்கள் செல்வது அதிகரித்துள்ளமையினால், இவ்வாறான முயற்சிகள் வெற்றியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இயக்கி அமைந்துள்ள அமைவிடமும், வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பிரயாணிகளை கவரும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உள்ளூர் உற்பத்திகளுக்கான விற்பனை நிலையங்களும் உருவாக்கப்படும் பட்சத்தில் உள்ளூர் உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.
உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து, வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு இணைத் தலைவராக இருக்கின்றமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக இருக்கின்ற ஒரேயொரு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம்தான். இது எமது மக்களுக்கான டபிள் புரொமோஷனாகவே அமைந்துள்ளது.
எனவே, இயக்கி உணவகம் போன்ற முயற்சிகளுக்கு தேவையான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.” எனவும் தெரிவித்துள்ளார்.