“எதிர்வரும் வாரம் முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடற்றொழிலுக்கு சொல்வதாயின் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” இது கடந்த கிழமை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விநோதன் தர்மராஜன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்பு. அதன்படி தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே கடலில் இறங்க அனுமதிக்கப்படுவர் என்று மன்னாரில் கடற்படையினர் அறிவுறுத்தியதாக தெரியவருகிறது. எனினும் பின்னர் அக்கட்டுப்பாட்டை அவர்கள் கைவிட்டதாகவும் தெரியவருகிறது.மன்னார் மாவட்டத்தில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியே ஏற்றப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டபின் சிலசமயம் மேற்படி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படக்கூடும். ஏனெனில் மன்னார் மாவட்ட மீனவர்கள் கடலில் தமிழக மீனவர்களோடு நெருங்கிப் பழகுவதற்கான அதிகரித்த வாய்ப்புகளை கொண்டிருப்பதனால் அவர்கள் இந்திய டெல்டா திரிபு வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடிய அதிகரித்த வாய்ப்புகளை கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.அந்த அடிப்படையிலேயே மேற்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
எதுவாயினும் எதிர்வரும் காலங்களில் தடுப்பூசிக் கார்ட் அதாவது ஊசிக் கார்ட்டைக் காட்டினால்தான் கடலில் இறங்கலாம், சில காரியங்களைச் செய்யலாம், விமான நிலையங்களை கடக்கலாம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.
தமிழ் மக்களின் கடந்த பல தசாப்த கால வாழ்வில் அவர்கள் ஏதோ ஒரு ஆவணத்தைக் காவ வேண்டி இருந்தது. இதில் மருத்துவ மாதுக்களால் குடும்பப் பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா கார்ட் மட்டும் விதிவிலக்கு. அதற்கு பாதுகாப்பு தொடர்பான பரிமாணம் கிடையாது. அதைத் தவிர போர்க் காலம் முழுவதிலும் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அடையாள அட்டையை காவ வேண்டியிருந்தது. தான் பிறந்து வளர்ந்த தனது சொந்த ஊரிலேயே தனது சொந்த தெருவிலேயே ஒரு தமிழ் ஆள் ஒரு சிப்பாய்க்கு அல்லது காவல்துறை ஆளுக்கு தன்னுடைய அடையாளத்தை நிரூபிக்க வேண்டி இருந்தது. தனது சொந்தக் கடலில் இறங்கும் ஒவ்வொரு மீனவரும் ஒரு டோக்கன் இலக்கத்தை வைத்திருக்க வேண்டி இருந்தது. அதற்கும் ஒரு பாஸ் நடைமுறை இருந்தது.
அது யுத்த காலம்.ஆனால் இப்பொழுதும் கூட ஆங்காங்கே அடையாள அட்டையை கேட்கும் நடைமுறை உண்டு. வைரஸ் தொற்றைச் சாட்டாக வைத்து சந்திகளில் நிற்கும் படைத்தரப்பு இடைக்கிடை ஆவணங்களைக் கேட்டு சோதிக்கிறது. தமிழர்களுக்கு எப்பொழுதுமே சோதிக்கப்படும் ஒரு வாழ்க்கைதான். அவ்வாறு சோதிக்கப்படும் பொழுது உரிய ஆவணங்களைக் காட்டவேண்டும். இந்த ஆவணங்கள் தொடக்கத்தில் அடையாள அட்டைகளாக இருந்தன.அடையாள அட்டைகளும் பலவிதம்.தேசிய அடையாள அட்டை,மாவட்ட அடையாள அட்டை, ராணுவ அடையாள அட்டை என்றெல்லாம் அடையாள அட்டைகள் இருந்தன. சில சமயங்களில் குடும்பமாக படமெடுத்து அதை படைத்தரப்பு உறுதிப்படுத்திய பின் வீட்டில் குடும்ப அடையாள அட்டை போல அதை வைத்திருக்க வேண்டும்.அந்த படத்தில் இல்லாத யாராவது வீட்டில் இருந்தால் கைது செய்யப்படுவார்கள்.
இவைதவிர குடும்ப அட்டைகளை வைத்திருக்க வேண்டும். போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புமே குடும்ப அட்டை வைத்திருக்குமாறு கேட்டன. மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களின்போது பாஸ் தேவைப்பட்டது.அல்லது கிளியரன்ஸ் தேவைப்பட்டது.புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பயிற்சி அட்டை தேவைப்பட்டது. கடைசிக்கட்ட போரின்போது வன்னியில் பயிற்சி அட்டை இருந்தால்தான் குறிப்பிட்ட வயதுடையவர்கள் வெளியில் நடமாடலாம் என்ற ஒரு நிலைமையும் இருந்தது.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நலன்புரி நிலையங்களில் தமிழ் மக்கள் எல்லா ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டியிருந்தது. நலன்புரி நிலையத்துக்குள் நுழைந்த உடனேயே யு.என்.எச்.சி.ஆரால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் எவை என்று பார்த்தால் அதில் ஒரு தடித்த பிளாஸ்டிக்காலான ஆவணங்களைச் சேமிக்கும் ஒரு ஃபைல் கவரும் தரப்பட்டது. எதற்கு என்று கேட்டால் அகதிகள் தமது அடையாள ஆவணங்களை பேணுவதற்கு என்று கூறப்பட்டது.
அகதிக் கார்ட் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தேவைப்பட்டது. நாட்டுக்கு உள்ளே நலன்புரி நிலையங்களிலும் நாட்டுக்கு வெளியே இந்தியாவின் அகதி முகாம்களிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அப்படி ஒரு ஆவணம் தேவைப்பட்டது.
அடுத்தகட்டம் மீளக்குடியமர்வு. மீளக்குடியமர்ந்த போது வன்னியில் தமிழ் மக்களுக்கு புதிதாக ஒரு ஆவணம் தரப்பட்டது. அது என்னவென்றால் மீளக்குடியமர்ந்த ஒவ்வொருவரும் தமது காணிகளுக்குரிய ஜிபிஎஸ் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். மீளக்குடியமரும் பொழுது முதலில் படைத்தரப்பு குறிப்பிட்ட காணிக்குரிய ஜிபிஎஸ் அளவுகளை அளவெடுக்கும். அதன்பின் மீளக்குடியமரும் குடும்பத்துக்கு ஓர் இலக்கம் தரப்படும் அந்த இலக்கத்தை பிடித்துக்கொண்டு குடும்பத்தலைவர் நிற்க எனைய குடும்ப உறுப்பினர்களை அவர் அருகே நிறுத்தி வைத்து ஒரு படம் எடுக்கப்படும். அந்தப் படத்தை படைத்தரப்பு வைத்துக்கொள்ளும். மீளக்குடியமரும் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இலக்கத்தை தனது வீட்டின் வெளி வாசலில் தெரியக் கூடியதாக ஒட்டி வைத்திருக்க வேண்டும்.சில சமயங்களில் ஒரு காணியில் பல குடும்பங்கள் இருந்தால் அந்தக் காணியின் வெளி வாசலில் ஐந்துக்கு மேற்பட்ட இலக்கங்கள் ஒட்டப்ப்பட்டிருக்கும்.
தமிழ் மக்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் அடையாள அட்டையில் தொடங்கி ஜிபிஎஸ் அடையாளம் வரையிலும் வந்துவிட்டன.அதாவது டிஜிட்டல் யுகம் வந்தபின் தமிழ் மக்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் டிஜிட்டல் மயப்பட்டனவே தவிர ஆவணங்களை வைத்திருக்காமல் ஒரு பாதுகாப்பான வாழ்க்கை இல்லை என்ற நிலை.
இவ்வாறாக ஆயுத மோதல்கள் தொடங்கிய காலமிருந்து அவை முடியும் வரையில் தமிழ் மக்கள் ஏதோ ஒரு ஆவணத்தை காவ வேண்டியிருந்தது.இந்த ஆவணங்களை காவும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இப்பொழுது கொரோன வைரஸ் கொண்டு வந்திருக்கிறதா ? சாதாரண அடையாள அட்டையில் தொடங்கி ஜிபிஎஸ் அடையாளம் வரையிலுமான ஆவணங்களின் அடுத்தகட்டமாக இப்பொழுது ஊசிக்கார்ட் வந்திருக்கிறதா?
அது உலகப் பொதுவானதுதான். பெரும்பாலான விமான நிலையங்களில் நாடுகளின் எல்லைகளைக் கடந்து பயணம் செய்பவர்களுக்கு அப்படிப்பட்ட ஆவணம் இனிவரும் காலங்களில் கேட்கப்படலாம். ஏற்கனவே ஐரோப்பாவில் அது நடைமுறைக்கு வந்துவிட்டது. உதாரணமாக நோர்வேயில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஒரு மொபைல் அப்ப்ளிகேஷனில் தகவல்கள் பதிவேற்றப்படும்.அந்த மொபைல் பதிவைக் காட்டி பயணம் செய்யலாம்.பிரான்சிலும் டிஜிட்டல் ஹெல்த் பாஸ் நடைமுறையில் உள்ளது.
இதிலும் கூட ஒரு பயணி எந்த தடுப்பூசியை பெற்றிருக்கிறார் என்பது ஒரு விவகாரமாக வரலாம் போலத் தெரிகிறது. அண்மையில் கல்வித் தேவைகளுக்காக இந்தியாவுக்கு போக வேண்டியிருந்த ஒருவர் என்னிடம் கேட்டார் “பயண அனுமதிக்குரிய ஆவணங்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்று கேட்கப்படுகிறது. சீனத் தயாரிப்பு தடுப்பூசியை இந்தியா ஏற்றுக் கொள்ளுமா ?”என்று. இந்தப்பிரச்சினை இப்போது ஐரோப்பாவிலும் வந்திருக்கிறது. சீனத் தயாரிப்பான சினோபாம் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் இரண்டையும் பெற்றுக் கொண்டவர்களை ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்காது என்று ஒரு தகவல் வருகிறது. இது அடுத்த பிரச்சினை. உலகம் முழுவதுக்குமான பிரச்சினை. ஆனால் ஏழை இலங்கைப் பிரஜைகளுக்கு சினோபாமாவது கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தலைநகர் கொழும்பில் அஸ்ட்ரா செனிக் தடுப்பூசியை முதலாவது டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரை கிடைக்கவில்லை.இலங்கையில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டபின் ஓர் அட்டை தரப்படும். அந்த அட்டையை காட்டினால்தான் வருங்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமோ தெரியவில்லை. ஆனால் ஆவணங்காவிகளாக வாழ்வது என்பது தமிழ் மக்களுக்கு புதியது இல்லைத்தானே?
(அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் )