தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் ஜுலை கலவரம் உள்ளிட்ட இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ஜுலை படுகொலையின் 38வது ஆண்டு நினைவு நாளன்று, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிலையில் கல்முனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே செல்வராஜா கஜேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்படல் வேண்டும் மற்றும் தமிழ்த் தேசமும் இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தமிழர்களது காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் வேண்டும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.