இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
கொழும்பு- ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்ய குமார் யாதவ் 50 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சமிக்க கருணாரத்ன 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
குறிப்பாக இப்போட்டியில் துஷ்மந்த சமீர வீசிய முதல் பந்திலேயே பிரத்வீ ஷா, விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்;. இதன்மூலம் ரி-20 கிரிக்கெட்டில் இதுவரை முதல் பந்திலேயே விக்கெட் இழக்காத இந்தியா அணி, முதல்முறையாக முதல்பந்திலேயே விக்கெட்டை இழந்தது.
இதனைத்தொடர்ந்து 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 126 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரித் அசலங்க 44 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் குர்ணல் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 3.3 ஓவர்கள் வீசி 2 உதிரிகள் அடங்களாக 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை கொழும்பு- ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.