இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி 58 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
கே.எல். ராகுல் 57 ஓட்டங்களுடனும் ரிஷப் பந்த் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
நொட்டிங்ஹாம்- ட்ரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 64 ஓட்டங்களையும் பெயர்ஸ்டோவ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, 46.4 ஓவரில் மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடை நிறுத்தப்பட்டது.
இதற்கமைய இந்தியா அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்களை பெற்றது.
இந்தியா அணி சார்பில், ரோஹித் சர்மா 36 ஓட்டங்களுடனும் புஜாரா 4 ஓட்டங்களுடனும் விராட் கோஹ்லி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் அஜிங்கியா ரஹானே 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் ஒல்லி ரொபின்சன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை இன்று இந்தியா அணி தொடரவுள்ளது.