போர் களமாக மாறியுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 3.90 இலட்சமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரக் குழு தெரிவித்துள்ளது.
தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த ஊர்களிலிருந்து புலம்பெயர்ந்தோர் குறித்து ஐ.நா.வின் மனிதநேய விவகாரக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘தாக்குதலால் 3,90,000 மக்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 5ஆம் திகதி வரை காபூல் நகரத்திற்கு மட்டும் 5,800க்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும், பலர் வீதியோரங்களில் தற்காலிக இருப்பிடம் அமைத்தும், பூங்காக்களிலும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
நாடு முழுவதும் இதுவரை 156 தொண்டு நிறுவனங்கள் மூலம் 78 இலட்சம் மக்களுக்கு உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக போரிட்டு வந்த அமெரிக்க- வெளிநாட்டு துருப்புக்கள் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள தலிபான் அமைப்பினர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தி முக்கிய பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர்.
இதுவரை ஆப்கானிஸ்தானின் 421 மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஈரான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.