இங்கிலாந்தின் பிளைமவுத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) பிளைமவுத் கீஹாம் பகுதியில் உள்ள பிடிக் டிரைவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் சந்தேக நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அனைவரும் துப்பாக்கிச் சூட்டால் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 10 வயதுக்குட்பட்டவர் என்றும் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாகவும் டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘இந்த பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வேறு யாரையும் தேடவில்லை’ என அதிகாரிகள் கூறினர்.
சமூக ஊடகங்களில் அல்லது வேறு எங்கும் தாக்குதல் சம்பவத்தின் படங்களை ஊகிக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
2015ஆம் ஆண்டு முதல் நகரத்தை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஜோனி மெர்சர், இந்த தாக்குதல் சம்பவம் தீவிரமான மற்றும் சோகமான சம்பவம் என்று விபரித்தார்.
நாடாளுமன்றத்தின் மற்றொரு உறுப்பினரான லூக் பொல்லார்ட், இந்த சம்பவம் எங்கள் நகரம் மற்றும் சமூகத்திற்கு மிகவும் மோசமான நாளை குறிக்கிறது என கூறினார்.