ஹெய்டியில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளதோடு 344பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிவாரணப் பணிகள் விரிவடையும் நேரத்தில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. முந்தைய எண்ணிக்கை புதன்கிழமை 2,189ஆக இருந்தது.
கடந்த 14ஆம் திகதி நாட்டையே உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் மொத்தமாக 12,268பேர் காயமடைந்துள்ளதாகவும் கிட்டத்தட்ட 53,000 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், டிபுரோன் தீபகற்பப் பகுதியில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் சேதாரமான 77,000 கட்டடங்களில் 53,000 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியிருக்கிறது.
அதிகாரிகள் விநியோக இடங்களில் பாதுகாப்புடன் போராடி வருகின்றனர். நிவாரணப் பணியாளர்கள் ஹெலிகொப்டர் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
உதவி லொரிகளையும் ஆம்புலன்ஸ்களையும் கூட சில கும்பல்கள் கடத்திச் சென்றுள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வருகின்றது.
கரீபியன் தீவு நாடான ஹெய்டி, பேரழிவு தரும் பூகம்பம், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றால் நாடு தத்தளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.