அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ள நிலையில், இதனை தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர்.
பல்லாயிரம் உயிரிழப்புகளையும் பல லட்சம் கோடி செலவையும் ஏற்படுத்திய இந்தப் போர் முடிவுக்கு வந்துள்ளதனை வீதிகளில் துப்பாக்கிகளால் சுட்டு தலிபான்கள் கொண்டி வருகின்றனர்.
இதன்படி, ஒகஸ்ட் 31ஆம் திகதிக்குள் வெளியேற்ற நடவடிக்கைளை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வைத்திருந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே சண்டையில் ஈடுபடாமல் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட வெளியேற்றும் நடவடிக்கைகளில் இதுதான் மிகப் பெரியது என்று ஜெனரல் ஃபிராங்க் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் காபூலில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானுடன் வெளியுறவு தொடர்பை மட்டுமே இனி அமெரிக்கா கொண்டிருக்கும்.
ஆனால் அந்த அலுவலகம் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருக்காது கத்தாரில் உள்ள தோகாவில் ஆப்கானிஸ்தான் உடனான வெளியுறவு தொடர்பாடல்களை மேற்கொள்ளும் அலுவலகம் அமெரிக்காவிலிருந்து நிர்மாணிக்கப்படும் என்று அந்நாட்டின் வெளியுறவு செயலர் ஆண்டனி ப்லிங்கன் தெரிவித்துள்ளார்.
2001ஆம் மற்றும் 2019ஆம் ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 822 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசாங்கம் செலவிட்டுள்ளதாக அலுவல்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பாகிஸ்தானில் செய்த செலவுகள் இதில் அடங்காது.
அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகியவை முறையே 30 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 19 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகியவற்றை செலவழித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ஆம் ஆண்டே அமெரிக்காவுக்கு ஆதரவான நேட்டோ படைகள் வெளியேறியிருந்தன.
ஒகஸ்ட் 14ஆம் திகதி முதல் சுமார் ஒரு இலட்சத்து 23 ஆயிரம் பொதுமக்களை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி உள்ளதாக அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு தலைமை வகிக்கும் ஜெனரல் ஃபிராங்க் மெக்கன்சி தெரிவித்துள்ளார். இவர்களில் ஆறாயிரம் பேர் மட்டுமே அமெரிக்க குடிமக்கள்.
இவர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளாலும் பல்லாயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனால் அந்த நாடுகளுக்கு ஆக பணியாற்றி ஆப்கானியர்கள் அனைவருக்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட, செப்டம்பர் 11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001ஆம் ஆண்டு நடந்த பிறகு அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தலிபான்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக அமெரிக்கா அந்த நாட்டின் மீது படையெடுத்தது.
1996ஆம் முதல் 2001ஆம் வரை ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியின்கீழ் இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் விலகிய நிலையில் தற்போது மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.