ஆப்கானிஸ்தான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் வலியுறுத்தியுள்ளார்.
தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் அந்நாட்டு ஜனாதிபதி இமோமலி ரஹ்மோன் தலைமையில் நடைபெற்று வரும் காணொளி வழியிலான 21ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்க வேண்டும்.
தலிபான்களுடன் செயற்படுவது குறித்து ரஷ்யாவும் பரிசீலித்து வருகிறது’ என்று கூறினார்.
இதேபோல, ஆப்கானிஸ்தானில் சுமுகமான ஆட்சிமாற்றம் நடைபெறுவதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பி நாடுகள் நாடுகள் உதவ வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கடந்த 15ஆம் திகதி தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. அங்கு தலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். பிரதமராக ஹசன் அகுந்த், துணைப் பிரதமராக முல்லா பரதார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி நடத்தப்படும். முன்புபோல் இல்லாமல் உலக நாடுகளுடன் நேசமான உறவை விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், 73பேர் கொண்ட தலிபான் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பலரும் ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள். இதனாலேயே உலக நாடுகள் தலிபானுடன் நட்பு பாராட்ட தயக்கம் காட்டிவருகிறது.