ஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை- கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவரும் தற்போதைய சிறைத் துறை பொறுப்பாளருமான முல்லா நூருதீன் துராபி இதுகுறித்து கூறுகையில்,
‘எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றதைப் போலவே, மதச் சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் நிறைவேற்றப்படும்.
மரண தண்டனைகள், கைககளை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய, உறுப்புகளைத் துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமாகும்.
1990ஆம் ஆண்டுகளில் இந்த தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன. இந்த முறை இத்தகைய தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் நிறைவேற்றப்படலாம்.
எங்களது முந்தைய ஆட்சியின்போது பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்தது தேவையில்லாதது. எங்களது சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை.
புதிதாக அமைந்துள்ள அமைச்சரவை என்ன மாதிரியான தண்டனைகள் எல்லாம் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
எங்களின் செயற்பாடுகள் நாங்கள் அமெரிக்கர்கள் போல் அல்ல என்பதைக் காட்டும். நாங்கள் மனித உரிமைகளுக்காக நிற்கிறோம் எனக் கூறும் அமெரிக்கர்கள் மோசமான குற்றங்களைச் செய்வார்கள். நாங்கள் அப்படியல்ல. இஸ்லாம் சட்டங்களுக்கு உட்பட்டு தண்டனைகள் வழங்குகிறோம். கைகளைத் துண்டிப்பது பற்றி பல்வேறு விமர்சனங்களும் நிலவுகின்றன. ஆனால், கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார்.
இப்போது ஆப்கான் மக்கள் மத்தியில் ஊழல் மலிந்துள்ளது. பணத்தை அபகரிப்பது போன்ற பழக்கமும் உருவாகியுள்ளது. எங்கள் தண்டனை முறை அமைதியையும் நிலையான தன்மையையும் கொண்டு வரும். நாங்கள் எங்கள் சட்டதிட்டங்களை அமுல்படுத்திய பின்னர் அதனை யாரும் உடைக்க நினைக்க முடியாது’ என கூறினார்.
தலிபான்கள் தங்களின் முந்தைய ஆட்சியின் போது குற்றவாளிகளுக்கு காபூல் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் தான் தண்டனைகளை நிறைவேற்றுவார்கள். கொலைக் குற்றவாளிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவார்கள். பொதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களே இந்தத் தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளியிடமிருந்து பிளட் மனி என்றழைக்கப்படும் குற்றத்துக்கு இழப்பீடாக பெருந்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டால் கையை வெட்டுவார்கள். நெடுஞ்சாலையில் திருட்டில் ஈடுபட்டால் கால் துண்டிக்கப்படும்.