நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நாட்டில் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், கட்டம் கட்டமாக நீடிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 41 நாட்களுக்குப் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய,
- சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைவாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க முடியும்.
- ஆசன எண்ணிக்கையின் அளவுக்கு அமைவாக பயணிப்பதற்கு மாத்திரமே அனுமதி.
- பொது போக்குவரத்தின் போது குளிரூட்டப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த முடியாது.
- அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருந்தல் வேண்டும்.
- நிறுவனங்களுக்கு வரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும்.
- வீடுகளில் இருந்து வேலை செய்யுமாறு பணியாளர்களை ஊக்குவிப்பது அவசியம். இது அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்புடையது அல்ல.
- கடமைக்காக அழைக்க வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை நிறுவனத் தலைவர் தீர்மானிக்கலாம்.
- வைபவங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் விதத்திலான நிகழ்வுகளுக்கு ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அனுமதியில்லை
- பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதியில்லை.
- வீடுகளிலோ, வெளியிலோ விருந்துகள், வைபவங்கள், ஒன்றுகூடல்களை நடத்த முடியாது.
- திறந்தவெளிச் சந்தைகள், வாராந்த சந்தைகள் போன்றவற்றை பிரதேச சுகாதர மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடத்தலாம்.
- கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் சனநெரிசல் இல்லாத வகையில் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
- வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளே 5 பேர் மாத்திரமே இருக்க முடியும் என்பதுடன் ஏனைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வெளியே ஒரு மீட்டர் இடைவெளியை பேணி வரிசையில் நிற்க வேண்டும்.
- சிகையலங்கார நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
- திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும்.
- 200 க்குக் குறைவான மாணவர்களுடன் கூடிய பாடசாலைகள் திறக்கப்படும். அவை திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
- முன்பள்ளிகளை மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் அரைவாசிப்பேருடன் இயங்க வைக்கலாம்.
- தனியார் வகுப்புக்களுக்கு அனுமதியில்லை.
- சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நீதிமன்றங்கள் இயங்க அனுமதி.
- மதவழிபாட்டுத் தலங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள், ஒன்றுகூடல் போன்றவற்றிற்கு அனுமதியில்லை.
- திருமண பதிவிற்காக ஒக்டோபர் 15ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரை 50 பேருக்கும் அனுமதி.
- மரணச் சடங்குகளில் 15ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 15 பேருக்கும் அனுமதி.
- பூதவுடல் விடுவிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இறுதிக் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும்.
- உடற்பயிற்சி ஒழுங்கைகள், கடற்கரையோரங்களில் நடமாட மக்களுக்கு அனுமதி உண்டு.
- இருந்தாலும் 15 ஆம் திகதி வரை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
- சகல சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்