தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5ஆம் கட்டமாக 30 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12ஆம் திகதி முதல் 4 ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக இன்றும் இதுவரை இல்லாத வகையில் 5ஆவது கட்ட மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு மையங்கள், பாடசாலைகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும் செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவர்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.