தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.
அதன்படி, சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்துவது போன்ற பலவந்த நடவடிக்கைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் முடிவெடுக்க உரிமை உண்டு என்றபோதிலும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்துவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கூறினார்.
எனவே, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளைச் செயற்படுத்த நிர்ப்பந்திக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்தது.
அதன்படி, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் போதிய தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், எதிர்பார்த்தபடி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அரசாங்கத்தால் முடிக்க முடியாததால், இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.