அஸாமில் மிஸோரம் எல்லையை ஒட்டியுள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த பொலிஸாரை அஸாம் அரசு கைது செய்திருப்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள ஹைலாகண்டி பொலிஸ் எஸ்.பி. கௌரவ் உபாத்யாய, “ஹைலாகண்டி மாவட்டத்தில், பாய்சேரா பொலிஸ் துறை சோதனைச் சாவடி அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு குறைந்தசக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, மத்திய படைகளின் உதவியுடன் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினோம் விசாரணையைத் தீவிரப்படுத்தினோம்.
வெள்ளிக்கிழமை காலை அந்தப் பகுதியில் மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த பொலிஸார் நடமாடிக் கொண்டிருந்தாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, அந்தப் பகுதிக்கு வந்ததற்கான காரணத்தை அவா் தெளிவாகக் கூறவில்லை. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.
அஸாம் மாநிலத்துக்கு உட்பட்ட கச்சுர்தல் என்ற இடத்தில் பாலம் கட்டும் பணியை மிஸோரம் அரசு தொடங்கியது. அதற்கு அஸாம் எதிா்ப்பு தெரிவிக்கவே, கட்டுமானப் பணிகளை மிஸோரம் அரசு நிறுத்தி விட்டது என” தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களான அஸாம்-மிஸோரம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.