சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பு பேரணிகளில் கலந்துக் கொண்டவர்கள் மீது, சூடானின் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மன், தெற்கே வாட் மதனி மற்றும் வடக்கு நகரமான அட்பரா ஆகிய இடங்களில் ஜனநாயகத்துக்கு ஆதரவான பேரணிகள் இடம்பெற்றன.
இந்த போராட்டத்தினை கலைக்க முற்பட்ட பாதுகாப்பு படையினர், பேரணிகளில் கலந்துக் கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
அத்துடன் இந்த பேரணிகளில் பொலிஸாரை தாக்க முயன்றதாக கூறி டஸன் கணக்காணவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
சூடானில் நிலவும் பிரச்சனையைத் தீர்க்க, அரபு லீக் மத்தியஸ்தர்கள் கார்ட்டூம் நகருக்கு வந்து சேர்ந்த நிலையில், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
போராட்டக்காரர்கள், இராணுவ ஆட்சி பின்வாங்கப்பட்டு, அமைதியான முறையில் குடிமை ஆட்சி அனுமதிக்கப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.
ஆசிரியர்கள் பங்கெடுத்த ஒரு போராட்டம் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பல நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு நாட்கள் சிவில் ஒத்துழையாமை மற்றும் கடந்த மாதம் இராணுவம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக வேலைநிறுத்தப் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தனர்.ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான சூடான் இராணுவம், ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இடைக்கால நிர்வாகத்தை கலைத்து, டஸன் கணக்கான அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை கைது செய்தது.
இது ஏற்கனவே அமைதியற்ற ஆபிரிக்கா பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
ஒக்டோபர் 25ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னர் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றன. சூடானிய மருத்துவர்களின் சுயாதீன மத்தியக் குழுவின் கூற்றுப்படி, குறைந்தது 14 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 300பேர் காயமடைந்துள்ளனர்.