சீன சேதனப் பசளை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு சீன தூதுவருக்கு தெரிவிக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
சீன சேதனப் பசளை நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று திங்கட்கிழமை விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதை மேற்கோள் காட்டி அமைச்சர் மேலதிகமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சீனத் தூதுவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க விவசாய அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
மேலும் இந்த விடயம் குறித்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முற்பட்ட போதும், சீன தூதரக அதிகாரிகள் அதனை தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீன நிறுவனம் எந்த அடிப்படையில் உள்ளூர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கும் சீனத் தூதரக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.