பயணிகள் படகு கவிழ்ந்து பாடசாலைகள் மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்ததையடுத்து குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் குறித்த பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை, கிண்ணியாவில் உள்ள குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்கள் இந்தப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கிழக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையின் கீழ் ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட படகானது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் குறித்த படகு சேவையில் ஈடுபடவுள்ளது.