ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசப் படையினர் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியின்போது பாதுகாப்புப் படைகளில் பணியாற்றியவர்கள் ரகசியமாக படுகொலை செய்யப்படுவது மற்றும் அவர்கள் மர்மமான முறையில் காணாமல் போவது குறித்து மனித உரிமைக் கண்காணிப்பு (ஹெச்.ஆர்.டபிள்யூ) உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இத்தகைய நடவடிக்கைள் மோசமான மனித உரிமை மீறலாகும். மேலும், முன்னாள் அரசுப் படையினருக்கு ஏற்கெனவே தலிபான்கள் அளித்துள்ள பொதுமன்னிப்புக்கு விரோதமானதாகும்.
எனவே, தலிபான்களின் அனைத்து நிலைகளையும் சேர்ந்தவர்கள் பொதுமன்னிப்பு அறிவிப்பு முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
முன்னாள் படையினரின் படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் குறித்து வெளிப்படையான, முறையான, பொறுப்புணர்வுடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இத்தகைய உறுதியான நடவடிக்கைகள் குறித்து அனைத்துப் பிரிவினருக்கும் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.
அப்போதுதான், பொதுமன்னிப்புக்கு எதிராக முன்னாள் அரசப் படையினர் கொல்லப்படுவதும் காணாமல் போவதும் தடுக்கப்படும்.
ஆப்கனைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்துதான் அவர்களை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுப்போம் என்று கூறியிருந்தோம். அந்த நிலைப்பாடு இன்னும் தொடர்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், கனடா, நியூஸிலாந்து, ரோமேனியா, உக்ரைன் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.