இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால், இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கின்றார்.
இந்நிலையில் பேரறிவாளன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீதான ஆளுநரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும் ஆளுநர் உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இத்தகைய நிலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசாரணையின்போது, ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் அவர் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை என தமிழக அரசு வாதிட்டது.
அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்க முடியாத விடயம் என குறிப்பிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்பதுடன் குறித்த வழக்கை மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் இனியும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்கக் கூடாது என்றும் கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.